Sunday, March 8, 2015



இதுவரை எத்தனையோ நபர்களால்
அழைக்கப்பட்டிருக்கிறது எனது பெயர்

ஆனால் உன் குரலில் இனித்தது போல்
பிறிதோர் குரலில் இனிக்கவில்லை.

என்னை எனக்கே அழகாய் காட்டிய
மாயக் கண்ணாடி நீ.

உன்னில் உறைந்த ரசமான பிம்பம் நான்.

என்னக்குள்ளும் ஓர் அழகிய ரூபம் இருப்பதை
நீ எனை ரசிக்கும் தருணங்களில் உணர்கிறேன்.

மோகிக்கும் நேரங்களில்
உன்னிடம் நான் சேயாகிறேன்

காதல் தாண்டி கருணை பேசும் நேரங்களில்
நீ எனக்கு தாயாகிறாய்.

கல்லையும் கலை ஓவியமாக்கவும்
புல்லையும் பூவாக்கவும்
என் காதலியே உன்னால் மட்டுமே முடியும்.

இனி காதலில்லை என்றிருந்தேன்
காதலியாய் வந்தாய்

வாய் பேசா என்னை கவிஞன் ஆக்கினாய்

பாறை என்னில் சிற்பம் வடித்தாய்
முள்ளென இருந்தவனென்னை மலராக்கினாய்

இது தான் நான் என
என்னை நானறியும் வண்ணம் ஆளாக்கினாய்.

நான் பார்த்தேன்,

நீ விரல் நீட்டி இழுக்கும் தருணங்களில்
உன்னிடம் மயங்கி வானவில்லாய் வளைகிறது
நீள் வானம்.

உனைப் பார்த்து வெட்கிச் சிவக்கிறது
மேற்க்கினில் கீழ் வானம்.

உன் வீட்டுக் கொடிக் கயிற்றில்
நீ உடுத்த வேண்டி தவமென
காய்ந்து கொண்டிருக்கிறது
பலவண்ணங்களில் பால் வண்ண மேகங்கள்.

இதோ என் மனதிலுள்ள காதலை ஊற்றி
கவிதையொன்று உனக்கென எழுதுகிறேன்.

உன் இரசனைக்கு என் எழுத்து ஆளானால்
இவ்வுலகில் நானுமோர் கவிஞன் ஆவேன்

உனைப் பாடவெனவே.

0 comments :

Post a Comment

Tricks and Tips