Sunday, March 8, 2015



இதுவரை எத்தனையோ நபர்களால்
அழைக்கப்பட்டிருக்கிறது எனது பெயர்

ஆனால் உன் குரலில் இனித்தது போல்
பிறிதோர் குரலில் இனிக்கவில்லை.

என்னை எனக்கே அழகாய் காட்டிய
மாயக் கண்ணாடி நீ.

உன்னில் உறைந்த ரசமான பிம்பம் நான்.

என்னக்குள்ளும் ஓர் அழகிய ரூபம் இருப்பதை
நீ எனை ரசிக்கும் தருணங்களில் உணர்கிறேன்.

மோகிக்கும் நேரங்களில்
உன்னிடம் நான் சேயாகிறேன்

காதல் தாண்டி கருணை பேசும் நேரங்களில்
நீ எனக்கு தாயாகிறாய்.

கல்லையும் கலை ஓவியமாக்கவும்
புல்லையும் பூவாக்கவும்
என் காதலியே உன்னால் மட்டுமே முடியும்.

இனி காதலில்லை என்றிருந்தேன்
காதலியாய் வந்தாய்

வாய் பேசா என்னை கவிஞன் ஆக்கினாய்

பாறை என்னில் சிற்பம் வடித்தாய்
முள்ளென இருந்தவனென்னை மலராக்கினாய்

இது தான் நான் என
என்னை நானறியும் வண்ணம் ஆளாக்கினாய்.

நான் பார்த்தேன்,

நீ விரல் நீட்டி இழுக்கும் தருணங்களில்
உன்னிடம் மயங்கி வானவில்லாய் வளைகிறது
நீள் வானம்.

உனைப் பார்த்து வெட்கிச் சிவக்கிறது
மேற்க்கினில் கீழ் வானம்.

உன் வீட்டுக் கொடிக் கயிற்றில்
நீ உடுத்த வேண்டி தவமென
காய்ந்து கொண்டிருக்கிறது
பலவண்ணங்களில் பால் வண்ண மேகங்கள்.

இதோ என் மனதிலுள்ள காதலை ஊற்றி
கவிதையொன்று உனக்கென எழுதுகிறேன்.

உன் இரசனைக்கு என் எழுத்து ஆளானால்
இவ்வுலகில் நானுமோர் கவிஞன் ஆவேன்

உனைப் பாடவெனவே.

Friday, March 6, 2015

பெண்களே!!!

சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
எவ்வளவு தூரம் கடந்து விட்டர்கள்.

ஒரு காலத்தினில்,

ஏட்டுக் கல்வி மறுக்கப்பட்ட நீங்கள்
இன்று ஏடுகளில் எழுதப்படுகிறீர்கள்.

சமையலறை தாண்டாத நீங்கள் இன்று
சந்திராயனிலும் சாதித்தீர்கள்.

அங்கம் மட்டுமே கொடுத்துவந்த நீங்கள்
நாட்டிற்கு தங்கமும் வென்று கொடுத்தீர்கள்.

ஆடவரால் ஆளப்பட்ட நீங்கள்
இன்று அரசாளுகிறீர்கள்.

ஒப்பனைப் பதுமைகள் என்ற எண்ணம் கொன்று
ஒப்பிலாப் படைப்புகள் கொடுத்தீர்கள்.

கட்டிலையும் அதன் விளைவாய் தொட்டிலையும்
மட்டுமே கண்டுவந்த நீங்கள்

இன்று கால்பதிக்காத துறைகளுண்டோ.

சக்தி படைத்தீர்கள்
சாமானியம் துறந்தீர்கள்
சடுதியில் விரைந்து
சரித்திரம் படைத்தீர்கள்.

பெண்களே!!!
சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

இன்னும் பயணிக்க வேண்டிய தூரம்
நிறைய இருக்கின்றது.

சிகரம் மட்டுமே உன் இலக்கல்ல
விண்ணையும் தொடு இனி
விதியென்ற வீண் பேச்சு  உனக்கல்ல.

இவ்வளவும் சாதித்த  உங்களுக்காகவே
என் மகளிர் தின வாழ்த்துக்கள்.

Saturday, February 28, 2015


என் கணவா
எப்போதடா வீடு திரும்புவாய்.

நீ கட்டிய தாலி
என் மார்பினில் மோதி
ஏதேதோ சொல்கிறது.

சமைத்து வைத்து காத்திருக்கிறேன் உனக்காக
சூடு ஆறும் முன் வந்துவிடுவாயென.

வந்தாய் பசியோடு
சுவைத்தாய் ருசியோடு.

பரிமாறினேன் உன்னிடம்
பசியமர்ந்தாய் என்னிடம்

நிறைந்துவிட்டாய்! நீ உறங்கி விட்டாய்.
என் பசி கேட்டாயா?

என் கணவா எழுந்திடு
மீதமிருக்கிறது இன்னும். 

Saturday, February 14, 2015


உன்னிடம் சொல்லாத வார்த்தைகள்
என் கவிதைகளின் வரிகளாகின்றன

உன்னிடமும் சொல்லியிருக்கிறேன்
ஆனால் அதை நீ ரசிக்கவில்லை

என் கவிகளுக்கு வரிகளானபின்
அவை கொண்டாடப்படுகின்றன.
.
.
.
பல காதலிகளால்.

Saturday, February 7, 2015


பரந்து விரிந்ததோர் ஆறு கண்டேன்
அதிலென்மனம் பாய்ந்தோடக் கண்டேன்.

வழியெங்கும் நாணல் பூ
வெண்சாமரம் வீசக்கண்டேன்.

அயிரை மீன்கள் அணிவகுத்தென்
அடிப் பாதம் தீண்டக் கண்டேன்.

தாழப் பறக்கும் மீன்கொத்தி
தன் இரைகவ்விச் சென்றிடக்கண்டேன்.

நான் நதியாகிப் போனேன்.

காலைப் பொழுது தனில்
சோலை மரங்கள் என் மேல்
பூக்களை வாரி இறைப்பது கண்டேன்.

Tricks and Tips