Wednesday, December 31, 2014



முழுப்பரிட்சை தேதி அறிவித்தவுடன்
ஆரம்பித்துவிடும் பயமும் பதட்டமும்.

ஆனபோதிலும் அதைத்தாண்டி
ஆனந்தம் தருவது, அதுமுடிந்த
விடுமுறை நாட்களில் வரும்
ஊர்த்திருவிழா தான் !!!

காப்புக்கட்டிய நாளிலிருந்தே
மனம் லயிக்கும், மணம் பரப்பும்
அப்படியொரு மகரந்த வாசம்.

அக்னி தகிக்கும் வெய்யில் காந்தலும்,
ஆடித்திங்கள் முழுமைக்குமென
வேயப்பட்ட மூங்கில் கால் பந்தலும்,
தென்னங்குழையும், பந்தலில்
தொங்கும் பலா வகையும்,
சரம் சரமாய் சாத்துக்குடி வகையறாக்களும்,
பந்தலில் பளிச்சிடும் பப்ளிமாஸ் பழங்களும்,
கூந்தப்பனை தோரணமும், தார் தள்ள
வாழை மரம் கட்டிய காரணமும்
ஊர்த்திருவிழா தான் !!!

அல்லிநகரத்து மைக்செட்டும்
காதை கிழிக்கும் ஒலிபெருக்கிகளும்
தனிக் கங்கென தகிக்கும் சீரியல் செட்டுகளும்
கால்பந்து விளையாடும் யானை லைட்செட்டும்
சாலை நடுவே ஓங்கி ஒளிரும் அம்மன் ஆர்ச் சீரியலும்
சுவரெங்கும் பசை காயாத போஸ்டர்களும்
அழகாக மாற்றிவிடும் தெருவையே
ஓர் இரவிலே!

மூங்கில் வெட்ட கும்பக்கரை
பழவேட்டைக்கு சோத்துப்பாறை
மூங்கில் சுமந்துவரும் வண்டி கொடுத்த அலப்பரை
அந்த நாளில் நாங்கள் அறிந்ததில்லை
ஆனந்ததிற்கு வரைமுறை.

வெள்ளனா எழுந்து
வெண்ணீரில் குளித்து
புதுத்துணி அணிந்து, அன்றுண்ட
அம்மா சுட்ட இட்டலியும்,
மல்லிச்சட்டினியும் மனம் மறக்கவில்லை இன்னமும்.

கரகத்தில் ஆடிவரும் அம்மனின் அழகும்
அரிவாள் மேல் ஆடிவரும் கருப்பனின் மிரட்டல் தொனியும்
பயபக்தி (பயத்தினால் வந்த பக்தி) பொழுதுகள்.

சாயங்காலம் சரக்கடித்து
சண்டையில் சட்டை கிழிந்து
சாக்கடையில் பிரண்டெழுந்து, விடிந்ததும்
நெற்றியில் பட்டையும்,
மல்லுவேட்டி சட்டையும்
அணிந்துவரும் சண்டியர்கள்
சிரிப்பூட்டும் இம்சை அரசர்கள்.

மூன்று நாள்கழித்து மறுபூசை
ராகம் ராகமாய் ராட்டினங்கள்
வேடிக்கை பார்க்க மட்டுமென திருவிழா கடைகள்
ஆடியேந்தி வரும் அலங்கரித்த தீச்சட்டிகள்
அரைகுறை ஆடையில் ஆடும் கரகாட்டகாரர்கள்
மதுரை கலைநிலா குழுவினரின் ஆடலும்பாடலும்
அப்பப்பா!!!

ஓர் கனவு வந்து கிளருகிறது
பள்ளிப்பருவத்தோடு புதைந்துபோன
ஊர்திருவிழாவினை.

இப்படியொரு திருவிழாவையே மறந்தொரு ஊரினில்
பத்துமணிக்கு பிறகெழுந்து
நாயர்கடை சாமியானா பந்தலின் கீழ் நின்று
வெந்தும் வேகாத இட்டலியை
தண்ணீர்ச்சட்னியோடு சேர்த்து விழுங்கிக்கொண்டே
அசைபோடுகின்றேன் ஆழ்தூக்கத்துக்
கனவு கொடுத்த அழகிய நினைவுகளை.

0 comments :

Post a Comment

Tricks and Tips