Monday, December 29, 2014

கவிஞன்...
இவன்,
காதலையும் கண்ணீரையும் ஒருசேர ருசித்து பழகியவன்.
பாடுபொருளாக தன் பாடுகளையே பதிப்பவன்
சமூக அவலங்களை கரம் கொண்டும் மிதிப்பவன்.
இவன்,
குளிரில் வியர்ப்பவன்
வெய்யிலில் குளிர்பவன்
தன் எழுத்துக்களால் ஒளிர்பவன்.
பள்ளியிலே காதல் பயின்றவன்
விடலையிலே விரகம் இயற்றியவன்
கூடல் பொழுதுகளில் குளிர்காய்பவன்
பந்தக்கூட்டில் சிக்கியபின்
தன் வறுமையை, மனம் கொண்ட வெறுமையை
எழுத்துகளில் விற்ப்பவன்.
செல்வம் குறைந்தவன்
சொல்வளம் நிறைந்தவன்.
காதல் இயற்ற பெண்மோகம் கொள்பவன்
கருத்தாய் தான்பிறந்த மண்மீது
தணியாத தாகம் கொள்பவன்.
தாய் சொன்ன தமிழ் கேட்டு
தமிழே தன் தாயென்பவன்
தமிழ் சொல்லி தாயும் ஆனவன்.
எழுத்தாள்பவன்
எரிமலையிவன்
எழுந்தோங்கி நிற்ப்பவன்
எந்நேரமும் தமிழேக்கம் கொண்டவன்.
ஏட்டிக்கு போட்டியென பேசினாலும்
எதுகை மோனை காப்பவன்.
படுக்கை அறையிலும் பாடல் இயற்றுபவன், இவன்
முதலிரண்டு பாலையும் படித்து மறந்து
மூன்றாம் பாலிலே மூழ்கித் திளைப்பவன்.
மண்ணின் மணத்தை
பேனா மை கொண்டு .மலரச்செய்பவன்.
பேரானந்தத்தையும் பெருஞ்சோகத்தையும்
இயற்றும் பொழுதுகளிளெல்லாம் இயம்புவன்.
வாழ்கையின் எல்லா பரிமாணங்களையும்
வார்த்தைகளின் மூலமாக வாழ்கின்றவன்
ஆள்கின்றவன் .
வரிகளுக்கேற்ப வாழ்ந்துகொண்டிருப்பதால்
இன்பத்தில் ஆடாதவன்
துன்பத்தில் துவண்டுவிடாதவன்.
நிராகரிக்கப்படுகையில் சாணக்கியன்
பேர் புகழ் பெற்றாலும் சாமானியன்.
தலைசாய்ந்தாலும் தமிழென்பதால் என்னவோ
பலரின் பார்வைக்கு கிருக்கனிவன்.
முண்டாசுக்கவிஞனின் வழித்தோன்றலாகையால்
தமிழுக்கோர் பாரதியிவன்
தமிழ்தேருக்கோர் சாரதியிவன்.
எழுத்துக்களாலே பேசுவதாலென்னவோ
வாய்திறவா வள்ளுவன் இவன்!

0 comments :

Post a Comment

Tricks and Tips