Wednesday, December 31, 2014
















அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்துக்கள்
வாழ்த்துகின்றேன் ஆம் என்னை, உங்களை
நான் வாழ்த்துகின்றேன்.
உழவு என்றொரு வேத வார்த்தையினையே
அழிக்க அரும்பாடுபடுகிறோமல்லவா
அதற்காக வாழ்த்துகின்றேன்!

இன்று நாமிருப்பது நகரமோ கிராமமோ
ஆனால் நான் உண்ணும்
வகைவகையான உணவிலும்,
ஏன் அதன் ஒவ்வொரு பருக்கையிலும்
பின்னால் ஒளிந்திருப்பது ஓர் உழவன்!

உழவன், அவன் நரை தள்ளிய கிழவனென்றாலும்
அவன் பிடித்த கலப்பை போலவே கரமும்
நெஞ்சினில் உரமும் படைத்தவன்.

அவன் வைரம் பாய்ந்த கட்டை,
நாமறிய மாட்டோம் அவன் பட்ட பாட்டை.

நம்மை படைத்தவன் தெய்வமென்றால்
நமக்கு உணவு படைத்தவனை
காவல் தெய்வமாகவாவது வணங்கியிருக்க வேண்டாமா?

ஏனைய தொழிலனைத்தையும்
வியாபாரமாக நோக்குவோர் நடுவிலே
உழவுத் தொழிலினை கடமையென
கட்டுக்குலையாமல் கட்டிகாத்தவன் அல்லவா உழவன்.

உழவினை காக்க அவன் பட்ட பாடு
எழுதினால் பத்தாது ஏடு.

பாட்டன் பூட்டன் காலத்து சொத்தாம்
அவன் கொண்ட காணி நிலம்.
அந்த காணி நிலம் உழுது
அதற்காக அன்னாடமும் அழுது
அன்னாடங்காச்சியாய் உலகினில்
காட்சியளித்தவன்.

விதைநெல்லுக்கு வைத்தான் தாலி அடமானம்
விளைச்சல் பொய்த்தால் போகும் அவன் மானம்.

நாமின்று சுவாசிப்பது உயிர்வளி மட்டுமல்ல
உழவனின் உயிர் வலியும் தான்.
வளி கொடுத்த மரமென்ன  தானாய் வளர்ந்ததா?
இல்லை, அந்த மரமென்ன
நாம் கம்ப்யூட்டரில் விளைவித்ததா?

அன்று நம் பாட்டனொருவன் நிலம் இட்ட
விதைபழுத்து, அதையுண்ட பட்சிகள் இட்ட
எச்சம் தான் இன்று நாம் காணும் விருட்சம்.

உழவளித்தவனின் வழித்தோன்றல்
நாம் உழவழித்தோம்.

நாமிருக்கும் கட்டிடத்தை பெயர்த்துப் பார்த்தால்
அது கூறும் அந்நிலம் உழுதவனின் பெயரினை.

தஞ்சையில் ராஜராஜனுக்குண்டு கல்வெட்டு,
தஞ்சை பெரியகோவிலை கட்டிய தொழிலாளிக்கு
உணவளித்த உழவனுக்கெங்கே கல்வெட்டு.
தொழவேன்டாமா அவன் அடி தொட்டு.
அதுதான் வைக்கிறோமே உழவுக்கே அதிர்வேட்டு.
உறைந்து போன உழவொருனால் நம்
உணவிற்கும் வைக்கும் வேட்டு.

உழவன்! அவனில்லாமல் அவனியில்லை,
அகண்டு பரந்த அகிலமில்லை,
நாம் பசித்து புசிக்க அன்னமில்லை,
அவனிட்டதை உண்ட நமக்கோ அவன் எண்ணமில்லை,
மருந்துக்கும் கூட நாம் உழவு பற்றி எண்ணவில்லை.

குதிரைவாலி செய்தவனுக்கு குதிரை பலமாம்,
வரகு செய்தவன் உடல் கருங்காலி கட்டையாம்,
சாமை உண்டு சாவை வென்றான்,
இரும்புச்சோளம்... உழவோடு இயைந்து
வாழ்ந்ததோர் இரும்புப்பொற்காலம்.

தன் பிள்ளை படிக்க காடு விற்றவன் நினைத்திருப்பான்
இவன் படித்து இழந்ததை மீட்பானென்று, ஆனால்
அவன் சொத்தில் இவன் படித்தான்,
நிலமிழந்தவன்  பலமிழந்தவனாய் அழுது செத்தான்.

விதைநெல்லுக்கும்,
விளைச்சலுக்கும்,
விளைந்தது விற்றிடவும்
அவன் வடித்த கண்ணீர்.
நாம் அறிந்திருந்தால்
அறிந்திருக்க மாட்டோம்
பஞ்சத்தின் வகையில் தண்ணீர்.

இறைவா !!! போனது போகட்டும்
உழுது செத்தவனுக்கு சொர்க்கத்தில் இடம் கொடு!
இனி புலரும் ஆண்டிலாவது உழவுக்கு உயிர் கொடு!!!

0 comments :

Post a Comment

Tricks and Tips