Friday, January 2, 2015


பெருவெளிச்சமில்லை
ஆனால் அருகில் வருபவர்களை காணலாம்.

பிம்பங்களாய் தெரிகின்றன
மரங்களும் தூரத்து மலைகளும்.

கடிகாரம் பார்க்காமலே விழித்துக்கொண்டார்கள்
ஊரின் முதல் உழைப்பாளிகள்,
தொடங்கிவிட்டனர் வேலையை
காவென கரைந்துகொண்டே.

ஆள் அரவமற்ற அழகிய சாலையில்
தத்தித் தத்தித் தையல் நடை பழகுகின்றது
அழகு மைனாக்கள்.

கருப்பு வெள்ளையாய் தெரிகிறது
ஓங்கி வளர்ந்த மூங்கிலும், அதன்
உட்சிக்கிளையில் ஒய்யாரக் குருவிகளும்.

மின்சாரக்கம்பிகளும் ரசிக்கப்படுகிறது
சிட்டுக்கள் அமர்ந்து சிலிர்ப்பூட்டும்
குளிர் பொழுதுதனில்.

இயல்பாய் ரசிக்கவைக்கிறது
மீன்வால் குருவிகளும்
ஏகபாதமாய் நின்று இரைதேடும் வெண்நாரைகளும்.

பச்சைமேணி வயல்வெளிகள் எங்கும்
வெண்திட்டுகளாய் பனித்துளிகள். இவை
வானும் மண்ணும் சங்கமித்ததின்
பொருளுணர்த்தும் காதல் மொழிகள்.

சுவாசம் நிறைக்கின்றது
மாசில்லா பிராணவாயு.

நிசப்தம் கலைக்கின்றது பறவைகளின் சப்தம்
அது பகல்பொழுதின் பேரிரைச்சலுக்கெதிரான
மௌன யுத்தம்.

இந்த நாளுக்கான முதல் குளியலை ஏற்றுக்கொள்கிறது
தெளிந்த நீரோடையொன்று.

தண்ணீர் தெளிக்கும் தாவணிப்பெண்கள் தனியழகு.
புள்ளிமான்கள் இட்ட புள்ளிக்கோலம் பேரழகு.

மிதிவண்டி மிதித்துவருகிறார் பால்காரர்
தூக்கம் மிதக்கும் கண்களோடு,
பலரும் படுக்கையிலிருந்து துயில்கலைக்க.

அனைத்திற்கும் உச்சமென காணக்கிடைக்கின்றது
கதிரவனின் கீட்ரொளி அழகு
தாமரை இலையினில் பட்டுத்தெறித்து.

எப்படி உறங்கிகிடந்தேன் இத்தனை நாளாய்
இப்படியொரு அதிகாலையின் பேரழகை காணாமல்.

0 comments :

Post a Comment

Tricks and Tips