Wednesday, January 14, 2015

எழுவாய் தமிழனே எழுவாய்!
வந்துவிட்டது தைத் திருநாள்.
வாசனை திரவியங்கள் மணக்கும்
மேனி கொண்ட நமக்கு

கருக்கலில் கண்விழித்து
காளை பூட்டி ஏர் உழ
நெற்றி வியர்வை நிலத்தில் விழ
முப்போகம் விளைவித்தவனின்
முன்னுரை தெரியுமா?

அரிசியினை அன்னமாய்
மட்டுமே அறிந்த நமக்கு
நெல்லினை தெய்வமாகவும்
அரிசியினை பிரசாதமாகவும்


படையலிட்டு புழங்கியவனின்
முகவுரை தான் தெரியுமா?

நாமின்று கழனி விட்டு
கணினி தொட்டதால்
விவசாயமின்று தன் சாயமிழந்து
நம்மால் நாமறியாமலே
விவசாயத்திற்கு நாம் எழுதிய
முடிவுரை தான் தெரியுமா...?

ஏடு படித்தவன் ஏரோபிளேனில் பறக்கிறான்
ஏரோட்டியவன் இன்னமும் அதை
அண்ணாந்தே பார்க்கிறான்
நாம் பறந்து போவதை.
விவசாயம் தனை மறந்து போவதை.

கோயில் சென்று கலசத்திடம் கேட்டால்
அதிலிருக்கும் வரகு சொல்லும்
விவசாயம் தனை.

சாமி கூட தான் கீழிருந்து
விவசாயி விளைவித்ததினை
கோபுரத்தின் மேல் வைத்துள்ளது.
சாமானியன் நாம் விவசாயம் தனை
வாசல் வரை கூட வளர்க்கவில்லை.

உழுதவன் கணக்கு பார்த்தல்
உழக்கு கூட மிஞ்சாதென்பார்கள்.
நாம் உழுதவனையும்
கண்ணக்கில் கொள்ளவில்லை,
அவன் கணக்களந்த உழக்கினையும்
வழக்கில் வைக்கவில்லை.

கேஜி கணக்கில் ரைஸ் வாங்கும்
நமக்கு மரக்கால் படி மரபென்பது
மறந்துவிட்ட ஒன்றுதான்.

தங்கிய வியர்வை வழிய
நாமோடுகிறோம் ட்ரெட்மில்லில்.
அன்று அவன் சிந்திய
வியர்வை தான்
இன்றும் அரைபடுகிறது
நம்மூர் ரைஸ்மில்லில்.

நண்டோட நெல் நட்டான்
நரியோட கரும்பு நட்டான்
வண்டியோட வாழை நட்டான்
தேரோட தென்னை வைத்தான்.
நாமின்று விவசாயம் தனையே
ஓடவைத்து விட்டோமே!

வாளேந்தி சமர் செய்தவனை விட
சாலேந்தி துயருழுதவனே
என்னைப் பொறுத்தவரையில் போராளி.

மனிப்லான்ட் வளர்ப்பதெப்படி
தேடுகிறோம் இணையத்தில்.
மண்வெட்டி கொண்டு மண்ணை கிண்டி
அழகாய் விதை தூவி பாத்தி கட்டி
நீர் நிற்க வரப்புயர்த்தி
பக்குவமாய் பண்டுதம் பண்ணி
யானை கட்டி போரடிக்க
அறுவடை செய்து விளைவித்தவனை
நாம் வைக்கலாம் நம் இதயத்தில்.

இன்று நமக்கு பொங்கலென்பது
வழங்கப்படும் விடுமுறையும்,
தொலைக்காட்சியில் பொழுது போக்கும்,
சம்பிரதாயத்துக்காய் ஒரு தட்டை கரும்பும்
அவ்வளவு தான். ஆனால்

ஆறுமாதம் அரும்பாடு பட்டு
பொத்தி வளர்த்த நெர்க்கதிரினை
அறுவடை செய்திடும்
அழகிய உழவர் திருவிழா அவனுக்கு.

அவனிட்ட பொங்கல் பானையில்
மணந்தது பச்சரிசியும்
பசு நெய்யும் கருப்பட்டியும்
மட்டுமல்ல அவன் சிந்திய
வியர்வையும் தான்.

என்று நாம் பொங்கலை
உழவர் திருநாளாய் உணர்கிறோமோ
அன்று தான் நமக்கும் பொங்கலோ பொங்கல்.
அந்த நாள் ஏன் இந்த நாளாய் இருக்கக் கூடாது???

0 comments :

Post a Comment

Tricks and Tips