Saturday, February 28, 2015


என் கணவா
எப்போதடா வீடு திரும்புவாய்.

நீ கட்டிய தாலி
என் மார்பினில் மோதி
ஏதேதோ சொல்கிறது.

சமைத்து வைத்து காத்திருக்கிறேன் உனக்காக
சூடு ஆறும் முன் வந்துவிடுவாயென.

வந்தாய் பசியோடு
சுவைத்தாய் ருசியோடு.

பரிமாறினேன் உன்னிடம்
பசியமர்ந்தாய் என்னிடம்

நிறைந்துவிட்டாய்! நீ உறங்கி விட்டாய்.
என் பசி கேட்டாயா?

என் கணவா எழுந்திடு
மீதமிருக்கிறது இன்னும். 

Saturday, February 14, 2015


உன்னிடம் சொல்லாத வார்த்தைகள்
என் கவிதைகளின் வரிகளாகின்றன

உன்னிடமும் சொல்லியிருக்கிறேன்
ஆனால் அதை நீ ரசிக்கவில்லை

என் கவிகளுக்கு வரிகளானபின்
அவை கொண்டாடப்படுகின்றன.
.
.
.
பல காதலிகளால்.

Saturday, February 7, 2015


பரந்து விரிந்ததோர் ஆறு கண்டேன்
அதிலென்மனம் பாய்ந்தோடக் கண்டேன்.

வழியெங்கும் நாணல் பூ
வெண்சாமரம் வீசக்கண்டேன்.

அயிரை மீன்கள் அணிவகுத்தென்
அடிப் பாதம் தீண்டக் கண்டேன்.

தாழப் பறக்கும் மீன்கொத்தி
தன் இரைகவ்விச் சென்றிடக்கண்டேன்.

நான் நதியாகிப் போனேன்.

காலைப் பொழுது தனில்
சோலை மரங்கள் என் மேல்
பூக்களை வாரி இறைப்பது கண்டேன்.

Wednesday, February 4, 2015


ஒரு விடுமுறை தினம்
எனது கிராமத்து பேருந்து நிலையம்.

துண்டால் தலை பொத்தி
குத்தவைத்து இருமிக்கொண்டே
ஒரு பெரியவர்.

அவரருகினில் அவரின் மனைவி
வந்ததிலிருந்து அவரை
திட்டியபடியே இருக்கிறாள்.

"நீயெல்லாம் இன்னும்
உசுர வச்சுட்டு என்னத்துக்கு
இருக்குர பூமிக்கு பாரமா.

வயசுல குடியும் கூத்தியாளும்னு
கும்மாளம் போட்ட
இப்ப சீக்கு வந்து கஞ்சி
ஊத்தகூட நாதியில்லாம
திரியுற.

பெத்த புள்ள கூட மதிக்கலன்னப்பறமும்
ஒரைக்லையா ஒன் மண்டையில"

இன்னும் பலவாறும் வசை பாடியபடியே.

எனக்கு சரியான கோபம் அவள்மேல்.

பேருந்து வந்தது சற்றே நெரிசலாய்.

அவரை அப்படியே கைத்தாங்கலாய்
பிடித்து பேருந்தில் ஏற்றினால்.

இருக்கையில் இருந்த என்னிடம் வந்து

"யப்பே  ஒடம்பு சொகமில்லாத மனுசனப்பா
கொஞ்சம் ஒக்கார எடம் கொடு சாமி" என்றாள்.

அவரும் வந்தமர்ந்தார்.

அவள் அவரருகினில் கம்பியை
பிடித்த படியே தளர்வாய்
தளர்ந்து நின்றாள்.

என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
அவளை.

கம்பியில் தலை சாய்த்து
கண்கலங்கி மெல்லிதாக புலம்பினாள்.

"எப்புடி வாழ்ந்த மனுஷன்
அதட்டி சத்தம் போட்டா
ஒருத்தன் பதில் பேச மாட்டன் ஊருல.

இப்ப சீந்த நாதியில்லாம
சீக்கு வந்து கெடக்குராக.

மகமாயி ஒனக்கு கண்ணு குறுடாப் போச்சா
அப்படி இருந்த ஆள இப்புடி
பாக்கவச்சுட்டயே என்ன

ஆத்தா போதும் இந்த சீவனம்
கூட்டிட்டு போயிடு இவுகள
ஒங்கூடவே.

ஆனா...

இவுக உசுரு போகும் நிமிஷம் முன்ன
என் மூச்ச நிறுத்திரு டீ ஆத்தா...
இவுக இல்லாத இடத்துல
எனக்கென்ன வேல"

இறங்கும் இடம் வந்தது
அவரை வெளியில் திட்டிக்கொண்டே
அழைத்துச் சென்றாள்.

அடுத்த விடுமுறை சென்றேன்
பேருந்தினில் காலியாய் இருந்தது
இரண்டு இருக்கை.

ஜன்னல் வெளி தூரத்தில் பார்த்தேன்
மின்னிகொண்டிருந்தது இரண்டு
நட்சத்திரங்கள்.
Tricks and Tips