Tuesday, December 30, 2014



காற்றில் பறக்கிறது
யாரோ ஒருவன் கிழித்தெறிந்த காகிதமொன்று.

அது,
பள்ளிப்பாடம் எழுதிய பாலகனுடயதோ

பருவப்பெண் பழகிய கோலக்கிறுக்கல்களோ

வட்டிக்கணக்கெழுதிய கணவனின் காகிதமோ

வரவு செலவுக்கணக்கெழுதிய மனைவியின் காகிதமோ

விடலை ஒருவனின் முதல் காதல் கடிதமோ

விரக்தியில் எழுதிய மரண சாசனமோ

ஞான கிறுக்கனின் புலம்பல் தத்துவமோ

காதல் கசியும் கவிதைத் தொகுப்போ

காதலின் சாட்சியோ, இல்லை

கண்ணீரின் பாக்கியோ

ஒருவேளை அன்றொரு நாள்
நானிதுபோல் கிருக்கியதோ

யார் அறிவார்!

என் கண்ணெதிரே காற்றில் பறக்கிறது

யாரோ ஒருவன் கிழித்தெறிந்த காகிதமொன்று.

அதிகாலையில் காணக்கிடைக்கும்
யாருமற்ற சாலையின் அழகு,
சேலைக்குள் ஒளிந்திருக்கும்
பூவையின் வளைவு நெளிவு!
மிதமாக பயணி 
ரசிக்கலாம் பயணத்தை இரண்டிலுமே.

ஆங்கிலம்...
அதன் பாஷையிலே சொல்வதென்றால்
தந்தையை டாடியாக்கும்
தாயை மம்மியாக்கும்
தாய் தமிழ் மரபினை டம்மியாக்கும்.
கூழ் குடித்து வாழ்ந்த நாட்களில்
கூடியிருந்தவரெல்லாம் பிரிவினை கண்டனர்
பிட்சா பர்கர் கலாச்சாரத்தில்.
வேண்டும் ஆங்கிலமும்
ஆனால் அளவோடு.
இடைவந்த ஒன்றினுக்காய்
தலைமுறை தாங்கிநின்ற
தனித்தமிழை மறக்கலாமா?
சேலையாய் வேட்டியாய் தமிழுடுத்து
ஆங்கிலமிருக்கட்டும் கைக்குட்டையாய்.
தமிழினமே...
கைக்குட்டை ஒருபோதும்
உன் மானம் காக்காது.
தமிழ்ப்பெண்ணே தமிழுடுத்தி நட
மண்பார்த்து தழைய! தழைய!
உனை பார்த்து
உன் குலம் தழைய.


வேண்டாம்! வேண்டாம்!!!
இனியொரு பிறவி மானிடனாய்.
அதுவும் ஆண்மகனாய்,
அதிலும் தலைமகனாய்.

நினைத்த மாத்திரத்தில் 
கிடைத்தவை எல்லாம்
நினைத்த மாதிரி நிலைப்பதில்லை.
வாழ்க்கை அதன் அத்துணை முகங்களையும்
காட்டிவிட்டது பல பரிமாணங்களில்.

நான்...
தோற்றப்பிழையா?, 
இல்லை காட்சிப்பிழையா...?

வாழ்கையெனும் நாடகமேடையில்
நடிக்கத் தெரிந்தவன் வாழ்கிறான்.
ஒத்திகை இல்லாமல்
நடக்கிறது அரங்கேட்ரமொன்று.
மேடையேற வழிகொடுத்த நீ ஏன்
இறங்க நினைக்கையில் வழியடைக்கிறாய்!

பீஷ்மரைப்போல் எனக்கும் வரமளி
நினைத்தவுடன் மரித்துவிட.

பணம் சம்பாதிக்காத எந்த திறமையும்
மதிக்கபடுவதில்லை இங்கே!

நீ மட்டும் அமைதி காப்பதேன் அங்கே!
மனிதனாய் நீ அவதரித்த போதிலும்
உன்னையும் அவமதித்து
அழித்தது தானே நீ படைத்த
இந்த நல்லுலகம்.

ஓ!!! இறைவனே 
இந்த மானுடப்பிறவி, நீ
எனக்களித்த வரமா? இல்லை, சாபமா?


Monday, December 29, 2014

அந்தி சாயும் அழகிய பொழுதினிலே
வீடு திரும்புகிறான்,
ஒயிலான மனைவியுடன்
வெயிலாக கோபித்துச் சென்ற வானவன்.
பொய்க்கோபத்துடன் காத்திருக்கிறாள்
புவிமகளும்.
அடித்த கை அணைக்கவும் வரும் என்று.
மெதுவாக நெருங்குகிறான் வானவன்
நிலமகளை நோக்கி, ஆயினும்
பகலிலே அவன்காட்டிய கோபத்தின் அனல்
இன்னும் தணியவில்லை அவளுடம்பினிலே.
எப்படி தொடங்குவது என்றென்னியவன்
வாய்ச்சொல்லால் தூது அனுப்புகிறான் வாடைகாற்றினை.
காத்திருந்தவள் தானே அவளும்,
உடனே செவிமடுக்கிறாள்.
இல்லை இல்லை புவியுடல் கொடுக்கிறாள்
வாடைகாற்றின் வாயசைவிற்க்கிணங்க.
அமைதியாக பொழிய ஆரம்பிக்கின்றான்
அந்திச் சாரலாய்.
தொடக்கத்தில் சூடு காட்டியவள் இப்போது
நிலம் (உளம்) குளிர்கின்றாள்.
எவ்வளவு நேரம் தான் பொறுமையாய் பொழிவான்.
சூடுபிடிக்க தொடங்கியது சாரல்
அடைமழையானது அந்திமழை.
தன் குளிர்க் கரத்தால் தழுவி நிலமகளின்
மண்வாசனை(பெண்வாசனை) நுகர்கிறான்.
வெகுநேரமாய் தொடர்கிறது இதே நிலை.
அந்திமழை அடைமழையானது,
அவளுடல் ஆறுகாவிரியானது,
இருவரும் மூழ்கியே போய்விட்டனர் இன்பக்கடலிலே.
இருந்தபோதிலும்,
பொழிவதை நிறுத்திக்கொள்ள இவனுக்கும் மனமில்லை
இன்னமும் நீர்கொள்ள இவளுக்கும் தயக்கமில்லை.
இயற்கைகென்று ஒரு நியதி உண்டு தானே!
அப்படியொன்று இருப்பதாகவே தெரியவில்லை.
அப்பாடா!
ஒருவழியாக நீர்தீர்ந்து போக
மேகம்(மோகம்) களைந்தான் வானவன்.
மழை ஏந்திய களைப்பில் மயங்கி கிடக்கிறாள் புவிமகள்.
மழைவிட்ட போதினிலும்
ஆசைத்திவலைகள் தெரிதுக்கிடகின்றன,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் புவிமகள் மீதினிலே.
.
.
.
இப்போது இருவர் மனதும் ஏங்குகிறது 
அடுத்ததோர் அடைமழைக்கு.
Tricks and Tips