Saturday, January 10, 2015



எங்கோ சிதறிக்கிடந்த
உள் அணிபவைகளையும்
கணவன் போர்த்திப் படுத்திருக்கும்
தன் சேலையையும்
தேடி எடுத்து அணிந்து கொண்டாள்.

கலைந்த கார் கூந்தலையும்
அள்ளி முடிந்து கொண்டாள்.

அழகாய் சிரிக்கிறாள்
அம்மணக் குழந்தையாய்
உறங்கிக் கொண்டிருக்கும்
தன் கணவனைப் பார்த்து.

அவளுக்குள்ளேமுனகிக் கொள்கிறாள்
அவனைப் பார்த்து ரசித்தபடியே.

"கடை கடையாய் ஏறி இறங்கி
ரசனையாய் வாங்கி வந்து
அணியச்சொல்லி அழகு பார்க்கிறான்
பகலிலே.
ஆனால் அழுக்குப் பையன் இவன்
இரவு வந்தால் களைந்து விடுகிறான்
பகலணிவித்தவைகளை.
கேட்டால் என்னை அணிந்து கொள்ளேன்
என்பான் என் கலையழகு புருசன்.

இவனை கடிந்து கொள்வதா
இல்லை கட்டிக்கொள்வதா"

நீங்களே சொல்லுங்களேன்...!



Friday, January 9, 2015



கடுஞ்சொல்லு சொன்னேனுன்னு
கண்காணாம போன புள்ள.

கண்ணு ரெண்டும் தூங்கவில்ல 
கட்டியணைக்க வாடி புள்ள.

உனயென்னி நெதந்துடிக்கிறேன் 
கண்ணீர மட்டுமே கஞ்சி போல வடிக்கிறேன்.

சோறு தண்ணி எறங்கவில்ல
ஏஞ்சோகமின்னும் தீரவில்ல.

வட்டிசெம்பு வெளக்கவில்ல
வாசப் பெருக்கி கூட்டவில்ல.
எந்தாயி நீயில்லாம 
கொழம்பிப் போய் கெடக்குறேனே 
தெளிய வைக்க வாடி புள்ள.

நீ குடுத்த பால் சொம்பு 
மூலையில உருளுது.

ஓன் நெனப்பு மட்டுமே 
என் மூளையில பொரலுது.

கயித்துக்கட்டில் உன்ன 
கண் தேடுதடி 
ரவைக்குள்ள வந்துருடி...

Friday, January 2, 2015


பெருவெளிச்சமில்லை
ஆனால் அருகில் வருபவர்களை காணலாம்.

பிம்பங்களாய் தெரிகின்றன
மரங்களும் தூரத்து மலைகளும்.

கடிகாரம் பார்க்காமலே விழித்துக்கொண்டார்கள்
ஊரின் முதல் உழைப்பாளிகள்,
தொடங்கிவிட்டனர் வேலையை
காவென கரைந்துகொண்டே.

ஆள் அரவமற்ற அழகிய சாலையில்
தத்தித் தத்தித் தையல் நடை பழகுகின்றது
அழகு மைனாக்கள்.

கருப்பு வெள்ளையாய் தெரிகிறது
ஓங்கி வளர்ந்த மூங்கிலும், அதன்
உட்சிக்கிளையில் ஒய்யாரக் குருவிகளும்.

மின்சாரக்கம்பிகளும் ரசிக்கப்படுகிறது
சிட்டுக்கள் அமர்ந்து சிலிர்ப்பூட்டும்
குளிர் பொழுதுதனில்.

இயல்பாய் ரசிக்கவைக்கிறது
மீன்வால் குருவிகளும்
ஏகபாதமாய் நின்று இரைதேடும் வெண்நாரைகளும்.

பச்சைமேணி வயல்வெளிகள் எங்கும்
வெண்திட்டுகளாய் பனித்துளிகள். இவை
வானும் மண்ணும் சங்கமித்ததின்
பொருளுணர்த்தும் காதல் மொழிகள்.

சுவாசம் நிறைக்கின்றது
மாசில்லா பிராணவாயு.

நிசப்தம் கலைக்கின்றது பறவைகளின் சப்தம்
அது பகல்பொழுதின் பேரிரைச்சலுக்கெதிரான
மௌன யுத்தம்.

இந்த நாளுக்கான முதல் குளியலை ஏற்றுக்கொள்கிறது
தெளிந்த நீரோடையொன்று.

தண்ணீர் தெளிக்கும் தாவணிப்பெண்கள் தனியழகு.
புள்ளிமான்கள் இட்ட புள்ளிக்கோலம் பேரழகு.

மிதிவண்டி மிதித்துவருகிறார் பால்காரர்
தூக்கம் மிதக்கும் கண்களோடு,
பலரும் படுக்கையிலிருந்து துயில்கலைக்க.

அனைத்திற்கும் உச்சமென காணக்கிடைக்கின்றது
கதிரவனின் கீட்ரொளி அழகு
தாமரை இலையினில் பட்டுத்தெறித்து.

எப்படி உறங்கிகிடந்தேன் இத்தனை நாளாய்
இப்படியொரு அதிகாலையின் பேரழகை காணாமல்.

Wednesday, December 31, 2014
















அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்துக்கள்
வாழ்த்துகின்றேன் ஆம் என்னை, உங்களை
நான் வாழ்த்துகின்றேன்.
உழவு என்றொரு வேத வார்த்தையினையே
அழிக்க அரும்பாடுபடுகிறோமல்லவா
அதற்காக வாழ்த்துகின்றேன்!

இன்று நாமிருப்பது நகரமோ கிராமமோ
ஆனால் நான் உண்ணும்
வகைவகையான உணவிலும்,
ஏன் அதன் ஒவ்வொரு பருக்கையிலும்
பின்னால் ஒளிந்திருப்பது ஓர் உழவன்!

உழவன், அவன் நரை தள்ளிய கிழவனென்றாலும்
அவன் பிடித்த கலப்பை போலவே கரமும்
நெஞ்சினில் உரமும் படைத்தவன்.

அவன் வைரம் பாய்ந்த கட்டை,
நாமறிய மாட்டோம் அவன் பட்ட பாட்டை.

நம்மை படைத்தவன் தெய்வமென்றால்
நமக்கு உணவு படைத்தவனை
காவல் தெய்வமாகவாவது வணங்கியிருக்க வேண்டாமா?

ஏனைய தொழிலனைத்தையும்
வியாபாரமாக நோக்குவோர் நடுவிலே
உழவுத் தொழிலினை கடமையென
கட்டுக்குலையாமல் கட்டிகாத்தவன் அல்லவா உழவன்.

உழவினை காக்க அவன் பட்ட பாடு
எழுதினால் பத்தாது ஏடு.

பாட்டன் பூட்டன் காலத்து சொத்தாம்
அவன் கொண்ட காணி நிலம்.
அந்த காணி நிலம் உழுது
அதற்காக அன்னாடமும் அழுது
அன்னாடங்காச்சியாய் உலகினில்
காட்சியளித்தவன்.

விதைநெல்லுக்கு வைத்தான் தாலி அடமானம்
விளைச்சல் பொய்த்தால் போகும் அவன் மானம்.

நாமின்று சுவாசிப்பது உயிர்வளி மட்டுமல்ல
உழவனின் உயிர் வலியும் தான்.
வளி கொடுத்த மரமென்ன  தானாய் வளர்ந்ததா?
இல்லை, அந்த மரமென்ன
நாம் கம்ப்யூட்டரில் விளைவித்ததா?

அன்று நம் பாட்டனொருவன் நிலம் இட்ட
விதைபழுத்து, அதையுண்ட பட்சிகள் இட்ட
எச்சம் தான் இன்று நாம் காணும் விருட்சம்.

உழவளித்தவனின் வழித்தோன்றல்
நாம் உழவழித்தோம்.

நாமிருக்கும் கட்டிடத்தை பெயர்த்துப் பார்த்தால்
அது கூறும் அந்நிலம் உழுதவனின் பெயரினை.

தஞ்சையில் ராஜராஜனுக்குண்டு கல்வெட்டு,
தஞ்சை பெரியகோவிலை கட்டிய தொழிலாளிக்கு
உணவளித்த உழவனுக்கெங்கே கல்வெட்டு.
தொழவேன்டாமா அவன் அடி தொட்டு.
அதுதான் வைக்கிறோமே உழவுக்கே அதிர்வேட்டு.
உறைந்து போன உழவொருனால் நம்
உணவிற்கும் வைக்கும் வேட்டு.

உழவன்! அவனில்லாமல் அவனியில்லை,
அகண்டு பரந்த அகிலமில்லை,
நாம் பசித்து புசிக்க அன்னமில்லை,
அவனிட்டதை உண்ட நமக்கோ அவன் எண்ணமில்லை,
மருந்துக்கும் கூட நாம் உழவு பற்றி எண்ணவில்லை.

குதிரைவாலி செய்தவனுக்கு குதிரை பலமாம்,
வரகு செய்தவன் உடல் கருங்காலி கட்டையாம்,
சாமை உண்டு சாவை வென்றான்,
இரும்புச்சோளம்... உழவோடு இயைந்து
வாழ்ந்ததோர் இரும்புப்பொற்காலம்.

தன் பிள்ளை படிக்க காடு விற்றவன் நினைத்திருப்பான்
இவன் படித்து இழந்ததை மீட்பானென்று, ஆனால்
அவன் சொத்தில் இவன் படித்தான்,
நிலமிழந்தவன்  பலமிழந்தவனாய் அழுது செத்தான்.

விதைநெல்லுக்கும்,
விளைச்சலுக்கும்,
விளைந்தது விற்றிடவும்
அவன் வடித்த கண்ணீர்.
நாம் அறிந்திருந்தால்
அறிந்திருக்க மாட்டோம்
பஞ்சத்தின் வகையில் தண்ணீர்.

இறைவா !!! போனது போகட்டும்
உழுது செத்தவனுக்கு சொர்க்கத்தில் இடம் கொடு!
இனி புலரும் ஆண்டிலாவது உழவுக்கு உயிர் கொடு!!!



மறதி நோய் வருது மட்டுமில்லை வயோதிகம்
மறவா நோய் வருவதும் தான் வயோதிகம்.

தான் பெற்ற பிள்ளை தன்னை
அநாதை இல்லத்தில் விட்டதையும்
தன் மகளுக்கு தான் எப்படி
பாரமாணோம் என்பதையும்
வயதான காலத்திலும் தன்னைக்
காக்கும் பிள்ளைகளையும்
மறவாது நினைத்துக் கொண்டே இருக்கும் நோயது.

ஓடியாட முடியாத அவர்களின் மனதில்
நினைவோட்டம் ஆயிரங்கள்
வயோதிகமும் வரமாய் அமையப்பெற்றால்
அவர்களும் இயற்றுவார்கள் பாசுரங்கள்.
Tricks and Tips